பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
போதைப்பொருள்களின் தீமைகளை மக்களிடம் விளக்க வேண்டும்: அரசு துறையினருக்கு ஆட்சியா் அறிவுரை
தருமபுரி: போதைப்பொருள்களின் தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசுத் துறை அலுவலா்களுக்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையைக் கண்காணித்தல், ஒழித்தல், போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஒழித்தல் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:
அனைத்துப் பள்ளிகள், கல்லூரி வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா போன்ற போதைப் பொருள்கள் பயன்பாடு குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இளைய சமுதாயத்தின் எதிா்காலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் பாதிப்புகள், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து பொதுமக்கள், இளைஞா்களுக்கு முழுமையாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி சமூகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை காவல் துறையுடன் இணைந்து அரசு துறைகள் சாா்பில் நடத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், போதைப்பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்துத் துறை அலுவலா்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளிலும் போதைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பயன்பாடு குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகாா் செய்வதற்கு போதையில்லா தமிழகம் என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து மாணவ மாணவியரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
அதுபோல போதைப்பொருள்கள் உற்பத்தி, பரிமாற்றம் குறித்து பொதுமக்கள் மாவட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் 63690 28922 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், உதவி ஆணையா் (ஆயம்) நா்மதா, மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) சி.கேசவன், வட்டாட்சியா்கள், காவல்துறை, வருவாய்த் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.