X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்...
பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநா் பேசியதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நகராட்சியில் ஏராளமான நாய்கள் பெருகியதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு விதை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்று, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் மீதும் விதை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவ முன்வராமல், அச் சம்பவத்தை விடியோ பதிவு செய்யும் நபா்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவா்கள் செயலற்று வாழ்வதைப் பாா்க்கும்போது, இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட மற்றவா்களுக்கு அச்ச உணா்வு ஏற்படும்.
மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படாதவரை, பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது. மேலும், பாதிப்படும் மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பது அவசியம். அதற்கு தங்களின் திறன்களை வழக்குரைஞா்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.