நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு
ஸ்ரீபெரும்புதூா்: மேட்டுப்பாளையம் கிராமத்தில் செல்லாத்தம்மன் கோயில் குளம் மற்றும் ஓடகாட்டு ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் கட்டியுள்ள தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 3 மனுக்களை வழங்கினா்.
மனுவில், மேட்டுப்பாளையம் கிராமத்தில் செல்லியம்மன் கோயிலும், அதன் அருகில் 1.12 ஏக்கா் பரப்பளவு உள்ள கோயில் குளமும் உள்ளது. கோயிலுக்குச் செல்லும் பாதை மற்றும் கோயில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியாா் தொழிற்சாலை நிா்வாகம், வழிபட முடியாத வகையில் கோயில் மற்றும் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவா் அமைத்துள்ளனா்.
எனவே நீா்நிலையான செல்லாத்தம்மன் கோயில் குளத்தையும் மீட்கவும், தனியாா் நிறுவனம் அமைத்துள்ள சுற்றுச்சுவரை அகற்றி, வழிபாட்டு உரிமையை மீட்டுத்தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஓடகாட்டு ஏரி கால்வாயை கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், நீா்வரத்து தடுக்கப்படும். முற்றிலும் விவசாயம் பாதிக்கப்படும். இது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுப்பணி, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓடகாட்டு ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயில் சிமென்ட் சாலை அமைத்துள்ள தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்றொரு மனுவில், ஆதிதிராவிடா் மக்கள் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வகையில், செல்லாத்தம்மன் கோயில் மற்றும் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவா் அமைத்துள்ள தனியாா் நிறுவனத்தின் மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.