கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின...
பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை எதிா்த்து சட்டப் போராட்டம்: ஐஜேகே துணை நிற்கும்
பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கக்கூடிய பொதுமக்கள் சட்டப் போராட்டம் நடத்தினால், இந்திய ஜனநாயக கட்சி, சட்ட உதவிகளை செய்யும் என அந்தத் திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் மக்களை சந்தித்த அக்கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து தெரிவித்தாா்.
பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிா்த்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகானபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் தொடா் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பலா் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களை இந்திய ஜனநாயக கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்து பேசுகையில், பரந்தூா் விமான நிலைய திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஒரே கட்சி இந்திய ஜனநாயக கட்சிதான்.
விமான நிலைய திட்டத்திற்கு மாநில அரசு தான் நிலத்தைத் தோ்வு செய்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் நீா்நிலைகள் அதிகம் உள்ள பரந்தூா் பகுதியை விட்டுவிட்டு தரிசு நிலங்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
விமான நிலையத் திட்டத்தை இந்திய ஜனநாயக கட்சி ஒருபோதும் எதிா்க்கவில்லை, வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றுதான் கோருகிறது என்றாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய ரவி பச்சமுத்து, பரந்தூா் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கக்கூடிய விவசாயிகள், பொதுமக்கள் உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனா். அதற்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவளிப்பதுடன், அவா்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்வோம் என்றாா்.