செய்திகள் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 நாள் ஆட்சி! அதிரடியா? அடாவடியா?

post image

அமெரிக்க அதிபர் தேர்தலில் 51% வாக்குகளைப் பெற்று, மூன்று கொலை முயற்சிகளில் இருந்தும் உயிர்தப்பி, அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக, சுமார் ரூ. 1,742 கோடி செலவில் ஜனவரி 20 ஆம் தேதியில் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.

தான் அதிபராகப் பதவியேற்ற நாளிலிருந்து, 50 ஆம் நாளான இன்றுவரையில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுபோலவே டிரம்ப்பின் அறிவிப்புகளும் உத்தரவுகளும் இருப்பதாக உலகத் தலைவர்களும் மக்கள் பலரும் கூறுகின்றனர். சமீபகாலமாக, செய்தி ஊடகங்களின் முன்பக்கங்களை டிரம்ப் மட்டுமே, தனது அறிவிப்பு செய்திகளால் (அராஜகச் செய்திகளாகக்கூட இருக்கலாம்) பெரும்பாலும் ஆக்கிரமித்து வருகிறார்.

டிரம்ப்பின் அரை சத நாள்கள் ஆட்சியில் அறிவித்த உத்தரவுகளும் அதன் விளைவுகளும்...

முன்னாள் அதிபர் ஜோ பைடன் அறிவித்த உத்தரவுகளை ரத்து செய்வதற்காகவே, தான் மீண்டும் அதிபராக வேண்டும் என்ற நோக்கில்தான் டிரம்ப் வெற்றி பெற்றதுபோலத் தெரிகிறது. ஆம், பைடன் உத்தரவுகள் பலவும் டிரம்ப்பால் ரத்து செய்யப்பட்டு விட்டது. அமெரிக்க விசாக்கள்தொட்டு இஸ்ரேலுக்கான ஆயுதங்கள்வரையில் பைடனின் உத்தரவுகள் அனைத்தும், தற்போது டிரம்ப்பின் ரத்து பட்டியலில் கிடக்கின்றன.

நாடு கடத்தல்கள்

அமெரிக்காவில் பெரியளவிலான நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிபர் தேர்தலின்போதே டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், ஜனவரியில் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களையும் அமெரிக்கா நாடுகடத்தியது. இந்த நாடுகடத்தல் செயல்முறையின்போது, இந்தியர்களின் கைகால்கள் கைவிலங்கால் கட்டப்பட்டதற்கு, அமெரிக்காவைக் கண்டிக்குமாறு மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும், இரண்டாவது முறை நாடுகடத்தப்பட்டவர்களும் அதே நிலைமையில்தான் இந்தியாவில் வந்தடைந்தனர்.

பெயர் மாற்றம்

மெக்சிகோ நாட்டு எல்லைகள் வழியாக அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறிய டிரம்ப், மெக்சிகோ மீது வரி விதித்ததுடன், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றியும் உத்தரவிட்டார்.

அது மட்டுமின்றி கிரீன்லாந்து, கனடா நாடுகளை எப்படியும் அமெரிக்காவுடன் இணைத்துவிட வேண்டும் என்றும் டிரம்ப் முயன்று வருகிறார். மேலும், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணம் என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்றும் தொடர்ந்து அவர் அழைப்பதும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், டிரம்ப்பின் முயற்சிக்கு இரு நாடுகளும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றன.

கூகுள் மேப் இந்தியாவிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மெக்சிகோ வளைகுடா

வரி விதிப்புப் போர்!

அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

புதிய வரியின்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவிகிதமும், சீன பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதமும், கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பால், உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கனடா, மெக்சிகோ மீதான வரி விதிப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி வரையில் நிறுத்தி வைக்கப்படுவதுடன், அதே தேதியில் மற்ற நாட்டு வரி விகித அளவிலேயே அந்தந்த நாடுகளுக்கு வரி விதிக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தார்.

இந்தியாவுடன் இணையும் சீனா

அமெரிக்காவின் வரி விதிப்பை எதிர்த்து, ``அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டுப் பொருள்களுக்கு அதிக வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளதை எதிர்ப்பதற்காக தில்லியும், பெய்ஜிங்கும் (இந்தியா, சீனா) ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் அதிகார அரசியலையும் எதிர்ப்பதில் நாம் முன்னணியில் இருக்கவேண்டும். யானையையும் (இந்தியா), டிராகனையும் (சீனா) மீண்டும் நடனமாட வைப்பதுதான், இந்தப் பிரச்னைக்கு சரியான தேர்வாக இருக்கும்’’ என்று இந்தியாவுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அழைப்பும் விடுத்தார்.

சீனா, கனடா, மெக்சிகோ நாட்டு கொடிச் சின்னங்கள்

உக்ரைன் அதிபரிடம் உக்கிரம்?

தான் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றவுடன், ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி, சில நடவடிக்கைகளையும் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டும் வந்தார். இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் 28ல் டிரம்ப்புக்கும் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

போரில் உக்ரைனுக்காக அமெரிக்கா அளித்த நிதி உதவி மற்றும் வருங்காலங்களில் பாதுகாப்பு அளிப்பதற்கு ஈடாக உக்ரைனில் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தமும் இந்த பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்படவிருந்தது.

ஆனால், ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் முக்கியக் குறிப்புகள் இல்லையெனக் கூறி, உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்று ஸெலென்ஸ்கி (யாரும் எதிர்பாராததைப்போல) கூறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் உதவி இல்லை என்றால், போரில் உக்ரைன் நிலைத்து நிற்க முடியாது என்று டிரம்ப் எச்சரித்தார். அதுமட்டுமின்றி, அமெரிக்கா செய்த உதவிக்கும், இந்த பேச்சுவார்த்தைக்கும் நன்றி கூறவில்லை என்று கூறி, ஸெலென்ஸ்கியை அதிபர் டிரம்ப்பும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் பேச்சுவார்த்தையில் வறுத்தெடுத்தனர். இந்த விவகாரம் உலக அரசியல் மேடையில் சற்று சலசலப்பான பேச்சை ஏற்படுத்தியது.

உக்ரைன் மீது அதிருப்தி கொண்டதால், ரஷியாவுக்குத்தான் டிரம்ப் ஆதரவாக இருப்பார் என்ற கருத்துகள் நிலவி வந்தது. இந்த நிலையில்தான், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு பொருளாதாரத் தடைகளும் அதிக வரியும் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் டொனால்ட் டிரம்ப்

விசாவையும் விடவில்லை

ஜோ பைடன் ஆட்சிக்கு முன்பு, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால் 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. பைடன் அரசு பொறுப்பேற்ற பிறகு, இதனை 540 நாள்களாக அதிகரித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், பைடனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ஜான் கென்னடி மற்றும் ரிக் ஸ்காட் ஆகியோர் மறுஆய்வுச் சட்டத்தின்கீழ் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஈபி5 முதலீட்டாளர் விசா திட்டத்துக்கு பதிலாக, 5 மில்லியன் டாலர் மூலம் பெறக்கூடிய (ரூ. 43.6 கோடி) புதிய கோல்டு கார்டு விசா திட்டத்தையும் டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது. கோல்டன் விசாவை பெறுபவர்கள் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

காஸாவுக்குக் கைகொடுக்கிறதா? கைப்பற்றுகிறதா?

ஓராண்டுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆறுவார கால போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே, காஸா முனையை மறுசீரமைப்பதற்காக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக டிரம்ப் அறிவித்தது யாரும் எதிர்பாராததுதான். அதுமட்டுமின்றி, காஸாவிடமுள்ள பிணைக் கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைக்குமாறும் முன்மொழிந்தார்.

இதனிடையே, காஸாவைக் கைப்பற்றவிருப்பதாக டிரம்ப் கூறியதையடுத்து, ஸ்காட்லாந்து நாட்டில் டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த பாலஸ்தீன் ஆதரவாளர்கள், `காஸா விற்பனைக்கு அல்ல’ என்று பெயின்டால் புல்தரையில் எழுதியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டொனால்ட் டிரம்ப்

நீதிமன்றத்தால் தப்பிய அரசு ஊழியர்கள்

அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவினத்தைக் குறைப்பதற்கும் செயல்திறன் மேம்பாட்டுத் துறையை எலான் மஸ்க் தலைமையில் டிரம்ப் நியமித்தார். இந்தத் துறையில் பெரும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது எதுவென்றால், அரசு ஊழியர்களைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதுதான். டிரம்ப் வழிகாட்டுதல் மற்றும் எலான் மஸ்க் யோசனையின்படி, அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பாரபட்சமின்றி பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இருப்பினும், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பொறுப்பு, வெள்ளை மாளிகை அலுவலகத்துக்கு கிடையாது என்று கூறி, டிரம்ப்பின் பணிநீக்க நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்கால தடை விதித்தது.

 இதனிடையேதான், பணிநீக்கம் தொடர்பான எலான் மஸ்க்கின் நடவடிக்கையுடன் அமெரிக்க கேபினட் அமைச்சர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, துறைரீதியான முடிவுகளை செயலாளர்களே எடுப்பார்கள் என்றும், எலான் மஸ்க் ஆலோசனை வழங்கலாம் என்றும் டிரம்ப் கூறியது, எலான் மஸ்க்கின் அதிகாரத்தைக் குறைத்து விட்டது என்று கூறிவிட முடியாது.

இந்தியாவுக்கும் இடையூறா?

இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால், இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தது இந்தியப் பொருளாதாரத்தில் மிளகளவாவது மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா என்ன?

இந்தியா மீதான வரியை டிரம்ப் அறிவித்தபோது, நமது பிரதமர் நரேந்திர மோடியும் அங்கிருந்தார் என்பதுதான் வேதனை என்று இங்குள்ள நெட்டிசன்கள் விமர்சனத்தை அள்ளித் தெளித்தது இன்றும் காய்ந்தபாடில்லை.

இதனிடையே, இந்தியாவில் அமெரிக்கப் பொருள்களின் மீதான வரி அதிகமாக இருப்பதை யாரோ ஒருவர் (டிரம்ப்தான்) அம்பலப்படுத்தியதால், வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டதாக வெள்ளைமாளிகையில் டிரம்ப் தெரிவித்தார்.

வரி விதித்தது போதாதென்று, இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா அளித்து வந்த ரூ. 183 கோடி நிதியுதவியையும் நிறுத்தி விட்டார். இந்தியா மட்டுமின்றி, வேறுசில நாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவியும் நிறுத்தப்பட்டது எனும்போது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது.

பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஐரோப்பிய நாடுகளும் அதிருப்தி

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன், சௌதி அரேபியாவில் டிரம்ப் பேச்ச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, நேட்டோவில் இருக்கும் எந்த ஐரோப்பிய நாட்டுக்கும் அழைப்பு விடுக்காதது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏமாற்றம் அளித்தது.

போரில் சம்பந்தப்பட்ட உக்ரைனைக்கூட அழைக்கவில்லை என்பதுதான் பெருந்துயரம். இதுவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான அதிருப்திக்கு வித்திட்டது என்கின்றனர் சிலர்.

இதனைத் தொடர்ந்து. போர் நிறுத்தம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரானும் டிரம்ப்புடன் ஆலோசனை நடத்தச் சென்றார். ஆனால், இதற்கு முந்தைய சந்திப்பைவிட இந்த சந்திப்பின்போது, இருவரும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை. சந்திப்பின் முடிவில் இருவரும் போலியான புன்முறுவலுடன் காணப்பட்டது, செய்தி ஊடகங்களுக்கு தீனி போடுவதாய் இருந்தது.

வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமருக்கோ இஸ்ரேல் பிரதமருக்கோ அளிக்கப்பட்டதுபோல, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்று செய்தி ஊடகங்கள் கூறின.

நிதியுதவி நிறுத்தம்

செலவினத்தைக் குறைப்பதற்காக, வெளிநாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவியையும் நிறுத்த டிரம்ப்பின் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த நிதியுதவி ரத்தால், இந்தியா மட்டுமின்றி பல நாடுகளும் சில வகைகளில் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டன.

  • இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க அளித்து வந்த 21 மில்லியன் டாலர்

  • மொஸாம்பிக் நாட்டுக்கு மருத்துவத்துக்காக வழங்கப்பட்டு வந்த 10 மில்லியன் டாலர்

  • கம்போடியா நாட்டில் இளைஞர் திறனுக்காக வழங்கி வந்த 9.7 மில்லியன் டாலர் மற்றும் கருத்து சுதந்திரத்துக்காக வழங்கி வந்த 2.3 மில்லியன் டாலர்

  • பராகுவே நாட்டின் சிவில் சமூக மையத்துக்கு வழங்கி வந்த 32 மில்லியன்

  • செர்பியாவில் பொது கொள்முதல் திட்டத்துக்காக வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன்

  • தேர்தல் மற்றும் அரசியல் செயல்முறை வலுப்படுத்தும் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த 486 மில்லியன் டாலர்

  • வங்கதேசத்தில் வலுவான அரசியலுக்கான 21 மில்லியன்

  • நேபாளத்தில் நிதி கூட்டாட்சிக்கு வழங்கி வந்த 20 மில்லியன் டாலர் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான 19 மில்லியன்

  • லைபீரியா நாட்டில் வாக்காளர் நம்பிக்கை திட்டத்துக்கு வழங்கி வந்த 1.5 மில்லியன்

  • மாலி நாட்டில் சமூக ஒற்றுமைக்காக வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன்

  • தென்னாப்பிரிக்காவில் ஜனநாயகப் பணிகளுக்காக வழங்கி வந்த 2.5 மில்லியன்

  • சமூக - பொருளாதார ஒற்றுமைகளை அதிகரிக்க கொசோவோ ரோமா, அஸ்காலி, எகிப்து நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 2 மில்லியன்

  • ஆசியாவில் கற்றல் மேம்பாட்டை அதிகரிக்க வழங்கி வந்த 47 மில்லியன்

  • பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகார மையத்துக்காக வழங்கி வந்த 40 மில்லியன்

டிரம்ப்பின் இந்த திடீர் அறிவிப்பால், அமெரிக்க நிதியுதவியின் மூலம் வெளிநாடுகளில் படித்து வந்த பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பேரிடியாய் விழுந்தது.

அதிபராகப் பதவியேற்று 50 நாள்களில் டிரம்ப் பிறப்பித்த ஆணைகளே உலக முறைமைகள் பலவற்றைச் சீர்குலைத்துப் போட்டிருக்கின்றன. அமெரிக்கா மட்டுமல்ல மேலும் பல நாடுகளும் அடுத்து அவர் என்ன செய்வாரோ? என்ற கலக்கத்தில்தான் இருக்கின்றன. நூறாவது நாளில் எப்படியிருக்குமோ?

ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க

உலகம் முழுக்க அசுத்தமான காற்றை சுவாசிக்கும் பெரும்பான்மை மக்கள்!

உலகின் பெரும்பான்மையான மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தரக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று 138 நாடுகளில் உள்ள 40,000 தரக் கண்காணிப்பு நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ரயில் சிறைப்பிடிப்பு: பிணைக் கைதிகளாக 100 பயணிகள்!

பலோச் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தென்மேற்கு பாகிஸ்தானில், ரயில் மீது தாக்குதல் நடத்தி ரயிலை சிறைப்பிடித்து, அதிலிருந்த 100 பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியுடன் வெளியேறியே ஜஸ்டின் ட்ரூடோ!

பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் தனது நாற்காலியுடன் நாடாளுமன்றத்தைவிட்டு ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறியே சம்பவம் இணையத்தில் வைராலாகி வருகிறது.கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் 7 ஆம... மேலும் பார்க்க

டிரம்ப்பிடம் மன்னிப்புக் கேட்டார் ஸெலென்ஸ்கி : அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கேட்டதாக டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார். ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்க... மேலும் பார்க்க

ஹாரி பாட்டர் புகழ் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார்!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார். அவருக்கு வயது 63.ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் மற்றும் டாக்டர் ஹூ ஆகிய படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று தனக்கெ... மேலும் பார்க்க