உலகம் முழுக்க அசுத்தமான காற்றை சுவாசிக்கும் பெரும்பான்மை மக்கள்!
உலகின் பெரும்பான்மையான மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தரக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று 138 நாடுகளில் உள்ள 40,000 தரக் கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் சாட், காங்கோ, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் காற்று மிகவும் அசுத்தமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் மாசுபட்ட 9 நகரங்களில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. வடகிழக்கில் உள்ள மேகாலயாவின் தொழில்நகரமான பைர்னிஹாட் இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பல இடங்களில் துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை என்றும் அப்படி தரவுகள் கிடைத்தால் காற்று மாசுபாடு குறித்து முழுமையான தகவல் கிடைக்கும் என்றும்m ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உதாரணத்திற்கு, ஆப்ரிக்காவில் 37 லட்சம் மக்களுக்கு ஒரேயொரு காற்று தரக் கண்காணிப்பு நிலையம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!
இந்தச் சிக்கலை எதிர்கொள்ள மேற்கொண்டு பல இடங்களில் தரக் கண்காணிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு 8,954 புதிய இடங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசு நிர்வாகம் உலகம் முழுக்க அதன் தூதரகங்கள் மூலம் இதுபோன்ற தரவுகளை பொதுவில் வெளியிடமாட்டோம் என அறிவித்தது காற்று மாசு தொடர்பான ஆய்வில் பெரிய அடியாக விழுந்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த காற்று மாசுபாடு ஆய்வாளர் ஃபாத்திமா அஹமத் பேசுகையில், “மாசுபட்ட காற்றை நீண்ட காலம் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு, அல்சைமர் நோய், புற்றுநோய் ஆகியவை ஏற்படலாம். காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் மக்கள் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. காற்று மாசுபாட்டின் அளவைக் குறைக்க இன்னும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உலக மக்கள் தொகையில் 99% பேர் பரிந்துரைக்கப்பட்ட காற்று தர அளவை பூர்த்தி செய்யாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு முன்பு கண்டறிந்தது.
உங்களிடம் மோசமான தண்ணீர் இருந்தால், ஒருவேளை தண்ணீர் இல்லை என்றாலும் தண்ணீர் வரும்வரை அரை மணிநேரம் உங்களைக் காத்திருக்கச் சொல்லலாம். ஆனால் உங்களிடம் மோசமான காற்று இருந்தால், மக்களை சுவாசிப்பதை நிறுத்தச் சொல்ல முடியாது” என்று கூறினார்.
இதையும் படிக்க | நினைவிருக்கிறதா தெலங்கானா ஆணவப்படுகொலை? குற்றவாளிக்கு மரண தண்டனை
பெய்ஜிங், சியோல், தென் கொரியா, போலந்து நாடுகளில் உள்ள பல நகரங்கள் வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வரும் மாசுபாட்டின் மீதான கடுமையான விதிமுறைகள் மூலம் தங்கள் காற்றின் தரத்தை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளன. அவர்கள் சுகாதாரமான முறையில் ஆற்றலை ஊக்குவித்து பொது போக்குவரத்தில் முதலீடு செய்துள்ளனர்.
உலக காலநிலை மற்றும் சுகாதார கூட்டமைப்பின் பிரசாரத் தலைவரான ஸ்வேதா நாராயண் கூறுகையில், “மிக மோசமான காற்று மாசுபாட்டைக் காணும் பல பகுதிகள் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றை எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை வெப்பமாக்கும் வாயுக்கள் பரவலாக வெளியிடும் இடங்களாகும். பூமியின் வெப்பமயமாதலை குறைக்க வெப்ப உமிழ்வைக் குறைப்பது காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். காற்று மாசுபாடும் காலநிலை நெருக்கடியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” என்று அவர் தெரிவித்தார்.