'நாங்கதான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தினோம்; ஆனா...’ - இறுதி போட்டி சம்பவம் குறித்து அக்ரம் வேதனை
தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இறுதிப்போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board). ஆனால், பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பிசிசிஐ கூறிவிட்டதால், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டது. அதுவும் ஒரே மைதானத்தில். அதனடிப்படையில், இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெற்றது.

இறுதியில் இந்தியா கோப்பையையும் வென்றது. ஆனால், வென்ற அணிக்கு கோப்பை மற்றும் வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒரு நிர்வாகி ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அப்போதே கேள்வியெழுப்பியிருந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும் தற்போது இதைப் பற்றி பேசியிருக்கிறார்.
`நாங்கள்தான் தொடரை நடத்தினோம். இருப்பினும்...’
ஊடக நிகழ்ச்சியொன்றில் பேசிய வாசிம் அக்ரம், ``பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இருப்பினும், PCB தலைமை இயக்க அதிகாரி சுமீர் அஹ்மத் சையத், PCB-க்கான சர்வதேச இயக்குநர் உஸ்மான் வஹ்லா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு வந்தனர். ஆனால், யாரும் அந்த நிகழ்ச்சி மேடையில் இல்லை. நாங்கள்தான் தொடரை நடத்தினோம். இருப்பினும், PCB-யை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபர்கூட ஏன் மேடையில் இல்லை? அவர்கள் அழைக்கப்படவில்லையா? அது என்ன கதையென்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், அதைப் பார்க்கும்போது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. பாகிஸ்தானின் பிரதிநிதிகளில் ஒருவராவது அங்கு கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர் கோப்பையை வழங்குகிறாரா அல்லது பதக்கங்களை வழங்குகிறாரா என்பது முக்கியமல்ல." என்று கூறினார்.
2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோதும், கோப்பையை பிரதமர் மோடிதான் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில், தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகள் ஒருவர் கூட இடம்பெறாதது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play