25 ஆண்டுகளுக்குப் பிறகு.... மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா!
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சங்கீதா நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் ஸ்நேகிதன் ஒரு பெண்ணு என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து, இவர் தமிழ் சினிமாவில் ரத்தத்தின் ரத்தமே படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எல்லாமே என் ராசாதான், சீதனம், அம்மன் கோயில் வாசலிலே உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படிக்க: பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை இவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு ஒய்வு கொடுத்த இவர், கடந்த 2014-ல் ’நகர வருதி நடுவில் நியான்’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன் பிறகு பராக்கிரமம், ஆனந்த ஸ்ரீபாலா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், 1998 ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் படத்துக்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து சங்கீதா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். காளிதாஸ் - 2 படத்தின் மூலம் திரும்பவும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

2019இல் வெளியான காளிதாஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இதில் பரத், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காளிதாஸ் - 2 படத்தின் பிரதான பாத்திரத்தில் சங்கீதா நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.