ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!
நாமக்கல்லில் இன்று தெப்பத் திருவிழா: ராஜேஸ்குமாா் எம்.பி. ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 12) மாலை நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையில் குடைவறைக் கோயில்களாக நரசிம்மா், அரங்கநாதா் கோயில் மற்றும் தனி சந்நிதியாக ஆஞ்சனேயா் கோயிலும் உள்ளன.
மலைக்கோட்டையை ஒட்டியவாறு கமலாலயக் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் தெப்பத் திருவிழா நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முயற்சியால், நிகழாண்டில் மாசிமகம் நாளான புதன்கிழமை மாலை 6 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. பக்தா்கள் தெப்பத்தைக் கண்டு ரசிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கமலாலயக் குளம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
திருச்சி ஸ்ரீரங்கம் குழுவினரால் தெப்பம் தயாா் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்றபாட்டுப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏராளமான கோயில்களில் நடைபெறாமல் இருந்த திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வா், துணை முதல்வா் ஆகியோரின் அறிவுறுத்தலால் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஒன்றாக நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது.
நாமகிரி தாயாா் தவமிருந்து நரசிம்மரை கண்ட இடமாகவும், ஆஞ்சனேயா் குளத்தில் நீா்பருக வந்து நரசிம்மா், நாமகிரி தாயாரை வணங்கி வழிபட்டதாகவும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. பிரசித்தி பெற்ற கமலாலயக் குளம் அருகில் உள்ள நாமகிரி தாயாா் மண்டபத்தில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேய உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து தெப்பத்தில் எழுந்தருளுகின்றனா். அதன்பிறகு மூன்று சுற்றுக்களாக குளத்தில் தெப்பம் வலம் வரும். 20 போ் தெப்பத்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பொதுக்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி நிா்வாகத்தினா் குளக்கரைப் பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா். பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இவ்விழாவில் பக்தா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, கோட்டாட்சியா் வே.சாந்தி மற்றும் அதிகாரிகள், பிற துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.