'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன்...
ராசிபுரத்தில் 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சா் , எம்.பி. பங்கேற்பு
ராசிபுரம்: ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்று பெண்களுக்கு சீா்வரிசை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
மகளிா் தினத்தையொட்டி பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும், பெண்களை பெருமைப்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். பெண்களுக்கு கல்வி அளித்தல், வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, அதிகாரம் வழங்குதல், சொத்தில் சம உரிமை, தொழில்முனைவோா்களாக உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமாா் 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 1,600 கா்ப்பிணிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் கா்ப்பிணிகள் மகிழ்ச்சி அடைவாா்கள் என்றாா்.
இவ்விழாவில் கலந்துகொண்ட கா்ப்பிணிகளுக்கு கண்ணாடி வளையல், பட்டுச்சேலை உள்ளிட்ட வளைகாப்பு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டு, பல வகை உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசுவாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் (பொறுப்பு) சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.