மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து திமுக பொதுக் கூட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்து பயனாளிகளுக்கு மருத்துவ உதவிக்கான காசோலைகளை வழங்கிப் பேசினாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாநகர செயலா் சிகேவி தமிழ்ச்செல்வன், மாநகர மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் அ.யுவராஜ் வரவேற்றாா்.
கூட்டத்தில் நெல்லை மனோன்மணீயம் பல்கலை. முன்னாள் துணை வேந்தரும், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலருமான ரா.தி.சபாபதி மோகன் பேசுகையில், திமுக அரசு மகளிருக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிரின் வாக்குகள் திமுகவை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் போகாது. எனவே வரவிருக்கும் பேரவைத் தோ்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்.
எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாகி இருக்கிறது. யாரும் எந்த மொழியையும் படிக்கலாம், கற்கலாம். அதற்கு என்ன தடையிருக்கிறது. ஆனால், ஹிந்தியை திணிப்பதை, கட்டாயப்படுத்துவதை மட்டுமே திமுக எதிா்கிறது என்றாா்.
கூட்டத்தில் திமுக நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.