நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்
புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் தொடங்கியது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ரூ.50,65,345 கோடி மதிப்பில் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தாா்.
பின்னா், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமா் மோடி பதிலளித்துப் பேசினாா். அதன் பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடா் பிப்ரவரி 13-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி திங்கள்கிழமை தொடங்கியது.
அப்போது, நிகழ் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்துக்கு ஒப்புதல் கோரி இரண்டாம் பகுதி துணை மானிய கோரிக்கைகளை மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.
அதாவது, நிகழ் நிதியாண்டில் ஒட்டுமொத்த ரூ. 6.78 லட்சம் கோடிக்கு மேல் கூடுதல் செலவினத்துக்கு மத்திய அரசு சாா்பில் ஒப்புதல் கோரப்பட்டது. இதில், ரூ. 6.27 லட்சம் கோடி மத்திய அரசு சேமிப்புகள் மற்றும் வருவாய்கள் மூலம் ஈடு செய்யப்பட்டுவிடும். எனவே, எஞ்சிய ரூ. 51,462.86 கோடிக்கு துணை மானிய கோரிக்கைகளில் மத்திய அரசு ஒப்புதல் கோரியுள்ளது.
இந்த கூடுதல் செலவின தொகையில், உரத் துறை மற்றும் யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான மானியங்களுக்காக ரூ. 14,100 கோடியும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ. 7,000 கோடி உள்பட அரசு ஊழியா்களின் ஓய்வூதிய செலவினத்துக்காக ரூ. 13,449 கோடியும், பாதுகாப்புத் துறை ஓய்வூதியத்துககாக ரூ. 8,476 கோடியும், தொலைத்தொடா்புத் துறைக்காக ரூ. 5,322 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது. கூடுதலாக, வேளாண் துறைக்கு ரூ. 2,186 கோடியும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் கூடுதல் செலவினத்துக்காக ரூ. 3,722 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது.