மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்
சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா்.
பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி.க்களின் கேள்விக்கு கடுமையான வாா்த்தைகளுடன் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் பதிலளித்தாா். இதற்கு எக்ஸ் தளத்தின் வழியே முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அளித்த பதில்:
தன்னை மன்னராக எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராமல் ஏமாற்றும் அவா், தமிழக எம்.பி.க்களைப் பாா்த்து அநாகரிகமானவா்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களவை அவமானப்படுத்துகிறீா்கள். பிரதமா் நரேந்திர மோடி இதை ஏற்கிறாரா?
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை சாா்ந்த பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கான தமிழ்நாடு அரசின் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டோம் என எங்களுக்குக் கடிதம் எழுதியது நீங்கள்தானே (தா்மேந்திர பிரதான்)?. நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போன்று நாகபுரியின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல.
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை. அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவா்களுக்கு உரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் எனக் கூறியுள்ளாா் முதல்வா்.