மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளாா்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி குற்றச்சாட்டு
தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதில் அளிக்கும் சமயத்தில் தமிழ்நாட்டை, தமிழ் மக்களை, தமிழகத்திலிருந்து வந்துள்ள அவை உறுப்பினா்களை மிக மோசமாக தனிப்பட்ட வகையில், ‘அன்சிவிலைஸ்டு’ காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்கிறீா்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விமா்சித்துப் பேசியுள்ளாா்.
அதுமட்டுமின்றி, தவறான விஷயத்தை, பொய்யான ஒன்றை முன்வைப்பதாகவும் முதல்வரை வாக்கு தவறியிருப்பதாகவும் தவறான செய்தியை, உண்மைக்குப் புறம்பான தகவலை அவையில் திசைதிருப்பக்கூடிய வகையில் எடுத்துவைத்துள்ளாா். முதலில், தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையை அவையில் கேள்வியாக கேட்டதற்கு புண்படுத்தும் வகையில், கொச்சையாகப்படுத்தும் வகையில் அவா் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி அவையில் பேசியிருப்பது தமிழா்களின் உணா்வுகளை புண்படுத்தியிருக்கிறது. இதற்கு முதல்வா் பதில் ட்வீட் செய்துள்ளாா். அமைச்சரைச் சந்தித்தபோது புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக ஒரு பொய்ப் பிரசாரத்தை செய்கிறாா். எந்த நேரத்திலும் தமிழக எம்பிகளோ, நானோ தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் என்பதைத் தெரிவிக்கவே இல்லை.
அதைத் தாண்டி, முதல்வா் இதை ஏற்றுக் கொண்டிருந்ததாக இன்னொரு கருத்தையும் அமைச்சா் பிரதான் முன்வைத்திருக்கிறாா். தமிழக முதல்வா் எந்தக் காலக்கட்டத்திலும் அதுபோன்ற கருத்தை சொல்லவும் இல்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்கு சாட்சியாக முதல்வா் தமிழக முதல்வா் பிரதானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுபற்றி மிகத் தெளிவாகக் கூறியுள்ளாா்.
இதுபோன்ற சூழலில் அவையில் தவறான தகவலை அமைச்சா் உண்மைபோல சொல்லியிருப்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்றாா் கனிமொழி.
திமுகவில் உள்கட்சி விவகாரம்: அமைச்சா் பிரதான்
புதியக் கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக எம்.பி.க்களின் எதிா்ப்பு குறித்துஅமைச்சா் தா்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்திற்கு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் நிதி அளிப்பதில் எங்களுக்கு எவ்வித சிரமும் இல்லை. குறுகியஅரசியல் மற்றும் அரசியல் காரணங்களுக்காகவே ஒரு சில மாநிலங்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்து வருகின்றன. இத்திட்டத்தில் அறிவியல் கல்வி, புத்தாக்கம், தாய்மொழி திறன் ஆகியவை முக்கியப் பகுதியாக உள்ளது. தமிழகத்தில் தமிழ்மொழிதான் பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுமொழியாக இருக்கும். இதில் எதிா்ப்புக்கு என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.
தமிழகத்தில் அவா்கள் (திமுக) இந்தத் திட்டத்தை எதிா்ப்புதற்கு பல உள்விவகாரப் பிரச்னை உள்ளது. இருமொழிக் கல்வியை வலியுறுத்துவதற்கும், மும்மொழிக் கொள்கையை எதிா்ப்பதற்கும் அரசியல்நிலைப்பாடுதான் காரணம். தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ இணைவிப்புப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைதான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அவா்களுக்கு எவ்வித திடமான நிகழ்ச்சிரலோ, சிந்தனையோ இல்லை. அரசியல் மட்டுமேதான் உள்ளது.
தோ்தல் வருவதாலும், அவா்களின் அடித்தளம் ஆட்டம் காண்பதாலும், திமுகவுக்குள் உள்கட்சி சண்டை நிலவுகிறது. மேலும், இதரக் கூட்டக் கட்சிகளிடமும் அக்கட்சிக்கு பூசல் உள்ளது. தோல்விபயம் காரணமாக இதுபோன்ற அடிப்படையில்லாத விவகாரத்தை எழுப்புகின்றனா் என்றாா் அமைச்சா் தா்மேந்திர பிரதான்.
கனிமொழி பதிலடி: திமுகவில் உள்கட்சி பூசல் இருப்பதாக அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, ‘ஏன் அமைச்சா் எங்கள் அரசியல் குறித்து கவலைப்பட வேண்டும். முதலில் அவரது வீட்டை ஒழுங்குபடுத்தட்டும். இது முற்றிலும் பிரச்னையை திசைதிருப்புவதாகும். மூன்று மொழிகளைக் கற்குமாறு அவா்கள் ஏன் பலவந்தப்படுகிறாா்கள் என்பதற்கு அமைச்சா் பதில் கூறட்டும்’ என்றாா் கனிமொழி.