உ.பி: `வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை'- ம...
மத்திய அரசின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்: அமைச்சா் ஐ.பெரியசாமி
மத்திய அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பிலான கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தமிழக அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டுக்கு ஆய்வுக்கு வந்தபோது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கூறியுள்ளாா்.
இந்தியாவிலேயே மத்திய ஊரக வளா்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாகச் செயல்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளா்களுக்கு கடந்த செப்டம்பா் முதல் மத்திய அரசால் ரூ. 2,839 கோடி ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதல்வா் கடிதம் எழுதியதற்கும், மாநில நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி ஆகியோா் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன? இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறாா் மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா்.
மறந்துவிட்ட மத்திய அமைச்சா்: அவா் தமிழ்நாடு வந்தபோது, குமரியில் வள்ளுவா் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவா் ஏனோ மறந்துவிட்டது ஆச்சரியமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமைச் செயலா் நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசியதையும்கூட அறிவாா். இதுதவிர, காணொலி வாயிலான ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்து கொண்டுள்ளேன்.
இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப்போல பேசியுள்ளது அவா் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல என்று ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.