காலை உணவு தயாா் செய்யும் பணி: ஆட்சியா் ஆய்வு
தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு காலை உணவு தயாா் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சமையல் கூடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா்.
தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா். அப்போது அங்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவுகளை உண்டு சுவை, தரத்தை ஆய்வு செய்தாா். இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படும் நேரம், முந்தைய நாள்களில் வழங்கப்பட்ட உணவுகளின் விவரம் உள்பட பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தாா்.
சமையல் கூடத்தை எப்போதும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, நகா்நல அலுவலா் லட்ஷியவருணா, சுகாதார ஆய்வாளா் சுசீந்தரன், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.