திருப்பதி ரயில்கள் ரத்து: மாா்ச் 17 வரை நீட்டிப்பு
திருப்பதி - காட்பாடி இடையே இயக்கப்படும் மெமு ரயில் ரத்து அறிவிப்பு மாா்ச் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகாகும்பமேளாவுக்காக நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மெமு ரயில்களின் பெட்டிகள் தெற்கு மத்திய ரயில்வேக்குள்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதில், திருப்பதி - காட்பாடி, காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாா்ச் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு இரவு 7.10-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 15-ஆம் தேதி வரையும், காலை 10.35-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 16-ஆம் தேதி வரையும், காலை 7.35-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும்.
காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு காலை 6.10, மாலை 5.15-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 16-ஆம் தேதி வரையும், இரவு 9.10-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும். காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு காலை 10.30-க்கும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து பகல் 12.55-க்கும் இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.