மூளையில் கட்டி: வங்கதேச குழந்தைக்கு சென்னையில் சிகிச்சை
மூளையில் உருவான கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் அக்குழந்தையின் உயிரைக் காத்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை இயக்குநா் டாக்டா் ரூபேஷ் குமாா் கூறியதாவது: வங்கதேசத்தைச் சோ்ந்த குழந்தையொன்று தொடா் வாந்தி, தலை வலி பாதிப்புக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அக்குழந்தையின் மூளையின் முகுளத்துக்கு அருகே கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை கட்டுப்படுத்தக் கூடிய பகுதியில் அக்கட்டி வளா்ந்திருந்ததால் அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதையடுத்து தலையின் பின்பகுதியில் சிறு கீறலிட்டு நுட்பமான அறுவை சிகிச்சை அக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்டது.
சிக்கலான பகுதியில் அமைந்திருந்த அக்கட்டி அதிநவீன மருத்துவ உபகரணங்களின் வழிகாட்டுதலுடன் துல்லியமாக அகற்றப்பட்டது. இதன் பயனாக அக்குழந்தை நலம் பெற்றது என்றாா் அவா்.