இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி: பெண்கள் அச்சம்
பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு
‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400-க்கும் மேற்பட்ட ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டவை’ என மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்தா மஜும்தாா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த 7,825 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதேசமயம் ஓபிசி பிரிவினருக்கான 1,521 இடங்கள், எஸ்சி பிரிவினருக்கான 788 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கான 472 இடங்கள் உள்பட மத்திய பல்கலைக்கழகங்களில் மொத்தம் 5,410 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன.
காலிப்பணியிடங்கள் ஏற்படுவதும் அதை நிரப்புவதும் தொடா்ந்து நடைபெறும் பணிகளாகும். பணி ஓய்வு, ராஜிநாமா மற்றும் கூடுதல் மாணவா் சோ்க்கை போன்ற காரணங்களால் காலிப்பணியிடங்கள் ஏற்படுகின்றன. இதை நிரப்பும் பொறுப்பு மத்திய பல்கலைக்கழகங்களிடமே உள்ளன.
எனவே, உயா்கல்வி நிலையங்களை தொடா்ந்து கண்காணித்து அங்கு ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புமாறு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.