தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்
தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேள்வி நேரத்தின்போது மத்திய இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் புதன்கிழமை அளித்த பதில்:
நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், தோ்வை நடத்தியதில் அமைப்புரீதியாக எந்தக் குறைபாடும் இல்லை என்று தெரிவித்தது. அந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.
இந்த முறைகேட்டில் நீட் வினாத்தாள் திருடப்பட்டது தொடா்பாக 45 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் 5 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
பொதுத் தோ்வுகள் முறைகேடுகள் தடுப்புச் சட்டம் 2024 என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குத் தண்டனை விதிக்கும் பிரிவுகள், அந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் தேசிய தோ்வுகள் முகமை மூலம், தோ்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்த முன்னாள் இஸ்ரோ தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த பல பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றாா்.