நாமக்கல்: நரசிம்மர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!
நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் உற்சவ மூர்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமியை கண்டு வழிபட்டனர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லினாலான மலைக்கோட்டையில் நரசிம்மர், அரங்கநாதர் குடைவறைக் கோயில்கள் அமைந்துள்ளன. ஆஞ்சனேயருக்கு தனி சந்நிதி உள்ளது.
மலைக்கோட்டையை ஒட்டியவாறு உள்ள கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளக்கு முன் தெப்பத் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ச. உமா, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முயற்சியால் தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, மாசிமகம் நாளான புதன்கிழமை மாலை 6 மணியளவில் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, அங்குள்ள நாமகிரி தாயார் மண்டபத்தில் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சனேயர் சுவாமிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு யாக பூஜைகளை செய்தனர்.
அதன்பிறகு மூன்று சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில், மலர்களால் ஜோடனை, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர்.

தெப்பக் குளத்தில் மூன்று முறை சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி. எஸ். மாதேஸ்வரன் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், மாநகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி, கோயில் உதவி ஆணையர் ரா.இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் கா.நல்லுசாமி மற்றும் அறங்காவலர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அர்ச்சகர்கள், வாத்தியக் குழுவினர், துடுப்பு செலுத்துபவர்கள் என 20 பேர் மட்டும் தெப்பத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தெப்பத்திருவிழாவை, நேரு பூங்கா, அம்மா பூங்கா, குளக்கரை திடல், நாமக்கல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நின்றவாறு ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
மலைக்கோட்டை மீது ஏறுவதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். தெப்ப உலாவின்போது தீயணைப்பு வீரர்கள் ஐந்து படகுகளில் பின்தொடர்ந்து சென்றனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து தீயணைப்பு வீரர்கள், போலீஸார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பக்தர்கள் நெரிசலின்றி தெப்பத்தை காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் இந்த தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இதையும் படிக்க | ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!