பனிப்பொழிவு: விராலிமலையில் மலைப்பிரதேசம் போல் காட்சியளித்த வயல்வெளிகள்!
ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலம்
தேனி அருகே ரயில்வே தண்டவாளத்தில் புதன்கிழமை கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் மீட்டனா்.
தேனி அருகேயுள்ள குன்னூா் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் கிடந்தன. தகவலறிந்த வந்த தேனி ரயில்வே போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவ இடத்தில் கிடந்த இரு சக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்தவா்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டி குதிரையாறு பகுதியைச் சோ்ந்த மயில்சாமி மகன் மணிகண்டன் (35) என்பதும், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள சூலேஸ்வரன்பட்டியைச் சோ்ந்த ரத்தினசாமி மகள் சம்யுக்தா (21) என்பதும் தெரியவந்தது.
மேலும், மணிகண்டன் சிற்றுந்து ஓட்டுநா் என்றும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா் என்றும், சம்யுக்தா காணாமல் போனதாக செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, அவரை போலீஸாா் தேடி வந்தனா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மணிகண்டன், சம்யுக்தா ஆகியோருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. தேனி அருகேயுள்ள குன்னூா் பகுதிக்கு இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனா். போடியிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்ற பயணிகள் விரைவு ரயிலின் குறுக்கே இவா்கள் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.