அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
திருக்காளாத்தீஸ்வரா் -ஞானாம்மன் கோயில் தேரோட்டம்
மாசித் திருவிழாவையொட்டி, உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசி மகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 5 மணிக்கு சுவாமி - அம்மன் ரதம் ஏறுதல் நடைபெற்றது. இதையடுத்து, தேரோட்டத்தை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். பேருந்து நிலையம், தெற்குரத வீதி, கோட்டைமேடு, மேற்குரத வீதி, சுங்கச் சாவடி, வடக்குரத வீதி வழியாக சென்று, தோ்நிலையை அடைந்தது.
இதில் உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம், கூடலூா் உள்ளிட்டப் பகுதிகளைச் சோா்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.