அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்
ஏ.வி.பெருமாள்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எந்தெந்தத் தொகுதிகளில் வாக்காளர்களை எவ்வாறு கவருவது, யாரை வைத்து அரசியல் செய்வது, எந்த விஷயத்தை முன்னிறுத்தி வாக்குகளை ஈர்ப்பது என பல கோணங்களில் அரசியல் கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், தென் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருக்கும் வியூகம்தான் அய்யா வைகுண்டர். தமிழகத்தில் அய்யா வைகுண்டருக்கு அரசியல் கட்சியினர் அளித்துவரும் முக்கியத்துவம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்கு ஆளுநர் முதல் அரசியல் கட்சியினர் வரை பலரும் வந்து செல்வதும், அவரது அவதார தினத்தில் தவறாது வாழ்த்து கூறுவது மட்டுமின்றி, அய்யா வைகுண்டர் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்பதும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒருபுறம், அய்யா வைகுண்டரை சநாதனவாதி என்கிறது பாஜக. மறுபுறம், வைகுண்டர் சநாதனவாதி அல்லர்; சீர்திருத்தவாதி என்கிறது திமுக. ஆளுநர் ஆர்.என்.ரவியும் அய்யா வைகுண்டர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
திருநெல்வேலியில் கடந்த மாத இறுதியில் அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவையாட்டி நடைபற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவி, "சநாதனத்தைப் பாதுகாக்கவே மகா விஷ்ணு அய்யா வைகுண்டராக அவதரித்தார். சநாதனத்தின் தலைநகரமே தமிழகம்தான். அய்யா வைகுண்டரை இந்த நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும். அவருடைய போதனைகளை பள்ளிப் பாடங்களில் சேர்க்க வேண்டும்' எனப் பேசினார். அவரது கருத்துக்களுக்கு அரசியல் எதிர்வினைகளும் கிளம்பின.
அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "ஆதிக்க நெறிகளுக்கும், சாதிய கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து சமத்துவத்துக்காகப் போராடியவர் அய்யா வைகுண்டர். எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என வைகுண்டவர் போதித்துச் சென்ற வழி நடந்து மனிதம் காப்போம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
10 சதவீத வாக்குகள்: தென்மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் நாடார் சமுதாய வாக்குகளே தேர்தல் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன. தென் மாவட்டங்களில் திமுகவுக்கு கிறிஸ்தவ நாடார், இஸ்லாமியர்களின் வாக்குகள் பெரும் பலம் என்றாலும் பல இடங்களில் ஹிந்துக்களின் வாக்குகளும் அதன் வெற்றிக்கு அவசியமாகிறது.
தென் மாவட்ட, குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஹிந்து நாடார்களில் கணிசமானோர் அய்யா வைகுண்டரின் வழியைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். பல சட்டப்பேரவைத் தொகுதிகளில் அய்யா வழி மக்களின் வாக்குகள் 2 முதல் 10 சதவீதம் வரை உள்ளன. அவர்களுûடய ஆதரவையும் பெற்றுவிட்டால் தென்மாவட்டங்களில் திமுகவின் வெற்றி எளிதாகிவிடும். இதனலேயே அய்யா வைகுண்டரைப் போற்றி ஹிந்து வாக்குகளைக் கவரும் உத்தியை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடைப்பிடிப்பதாகக் கருதப்படுகிறது.
அதேநேரத்தில் அய்யா வைகுண்டர் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பாஜகவினரும் பல ஆண்டுகளாகப் பங்கெடுத்து வருகின்றனர். அய்யா வழி மக்களிடையே பாஜகவுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது என்பதால் அதை வீணடித்துவிடக் கூடாது என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. அதன் காரணமாகவே, அய்யா வழி நிகழ்வுகளில் பாஜகவினர் மட்டுமல்ல, தமிழக ஆளுநரும் தீவிரம் காட்டி வருகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நிறைவேறாத கோரிக்கைகள்: அய்யா வைகுண்டரை வைத்து அரசியல் செய்வதில் கடும் போட்டி இருந்தாலும், அய்யா வழி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் கிடப்பிலேயே உள்ளன.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை தமிழகம் முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்; அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சீர்திருத்தக் கருத்துகளை தமிழக அரசு பாடநூலில் இடம்பெறச் செய்ய வேண்டும்; அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் ஆகியவற்றை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டரின் பெயரைச் சூட்ட வேண்டும் போன்றவை அய்யா வழி பக்தர்களின் பிரதான கோரிக்கைகள்.
எதிர்பார்ப்பு: வாக்கு வங்கிக்காக அய்யா வைகுண்டர் அரசியல் கட்சிகளால் கொண்டாடப்படக் கூடாது. அவருடைய புகழைப் பரப்ப கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறார்கள் அய்யா வழி பக்தர்கள்.