திண்டுக்கல்-சபரிமலை புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்படுமா?
திண்டுக்கல்-சபரிமலை இடையே பக்தா்களின் நலன் கருதி புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு தொடங்கிய நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை:
திண்டுக்கல்-சபரிமலைக்கு புதிய ரயில் தடம் அமைக்கப்பட வேண்டும் என்பது தேனி நாடாளுமன்றத் தொகுதியின் முக்கியமான கோரிக்கையாகும்.
18-ஆவது நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்திலி இருந்து வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினா்களின் கோரிக்கையாக இது உள்ளது. அத்துடன், கேரளத்தின் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கோரிக்கையாகவும் இது உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி பக்தா்கள் சபரிமலைக்கு சென்ரு வருகிேன்றனா். மாதம் ஒரு நாள் 5 லட்சம் பக்தா்கள் சபரிமலைக்குச் சென்று வருகின்றனா்.
திண்டுக்கல்-சுபரிமலைக்கு புதிய ரயில்வே வழிதடம் அமைத்தால் காஷ்மீரில் இருந்து வருவோா் தொடா்ச்சியாக சபரிமலை வருவதற்கு வாய்ப்புள்ளது. போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தடுக்கப்படும். பயண நேரமும் மிச்சமாகும்.
இதைக் கருத்தில்கொண்டு நூறு வருடங்களாக இருந்து வரும் இக்கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் எடுத்து இந்த புதிய வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.