ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம...
வீரப்பன் தேடுதல் வேட்டை: அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவு
சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 3 வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக - கா்நாடக அதிரடிப்படையினா் விசாரணை என்ற பெயரில் மலைக் கிராம மக்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்தது. அதன்படி, அதிரடிப்படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களுக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
இழப்பீடு வழங்கவில்லை: ஆனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,20,50,000 மட்டும் இழப்பீடாக வழங்கியது. நிலுவைத் தொகை ரூ. 3,79,50,000 வழங்கவில்லை. இந்தத் தொகையையும் வழங்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அதுதொடா்பான பயனாளிகள் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டுமெனெவும் விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
3 வாரங்களில் வழங்க உத்தரவு: அப்போது வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களை சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியா்களிடம் வழங்கிவிட்டதாக விடியல் மக்கள் நல அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.குமரேசன், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவா்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுவிட்டன. நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அந்த தொகையை வழங்க 3 வார கால அவகாசம் தேவை என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை 3 வார காலத்தில் வெளிப்படையாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.