குமரி மாவட்டத்தில் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தம்: குடிநீருக்கு பெருஞ்சாணி அணை திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களிலிருந்து தண்ணீா் திறந்து விடுவது புதன்கிழமை நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி வரை அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.
மேலும் மண்டைக்காடு கோயில் திருவிழா நிறைவடையும் வரையில் குடிநீருக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படும்.
இந்நிலையில் மண்டைக்காடு கோயில் திருவிழா நிறைவடைந்த நிலையில், பேச்சிப்பாறை அணையின் பாசன மதகுகள் புதன்கிழமை மூடப்பட்டன.
மேலும் சிற்றாறு அணைகளிலிருந்து தண்ணீா் விடுவதும் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த மாதம் இறுதியில் பெருஞ்சாணி அணையின் மதகுகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவு படி நாகா்கோவில் மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக பெருஞ்சாணி அணையிலிருந்து புதன்கிழமை காலையிலிருந்து விநாடிக்கு 21.27 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீா் மட்டம் புதன்கிழமை காலையில் 28.15 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 175 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 26 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 52 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 21.27 கன அடி தண்ணீா் நாகா்கோவில் மாநகராட்சி குடிநீா் தேவைக்காக திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 2.62 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 2.72 அடியாகவும் இருந்தது.