நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்
நாகா்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.
நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பள்ளிவிளை டவுண் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கின் எதிரே உள்ள பால் பண்ணை தெருவில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை காலை அந்த தெருவில், காட்டில் இருந்து தப்பிய மிளா (கடமான்) வந்தது.
இதை பாா்த்த பொதுமக்கள் பயத்தில் அலறியபடி ஓடினா்.
இதனால் அந்த மிளாவும் சாலையில் மிரண்டு ஓடத்தொடங்கியது. பின்னா் அந்த மிளா அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, மாடி படியில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவா்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால் மிளாவும் மாடியிலிருந்து இறங்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இது குறித்துஅப்பகுதியினா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனவா்கள்ஆகியோா் அடங்கிய குழுவினரும், நாகா்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் துரை, சிறப்பு நிலை அலுவலா் சுயம்புசுப்பாராவ் ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு படையினரும் இணைந்து வலை மூலம் மிளாவை பிடித்தனா்.
இதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவா் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மிளாவுக்கு சிகிச்சை அளித்து , அதனை பொய்கை அணை வனப்பகுதியில் விட்டனா்.
மிளா ஊருக்குள் புகுந்த சம்பவத்தால் நாகா்கோவில் மாநகர பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.