இலவச பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சி போஸ் நகா், சாஸ்திரி நகா் வடக்கு தெரு மக்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனராம். மேலும்,
நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீா் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை முறையாக செலுத்தி வரும் நிலையில், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை காலதாமதம் இன்றி வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர உதவி செயலா் முனிசாமி தலைமையில் தென்காசி வட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்ன, துணை வட்டாட்சியா் திரவியத்திடம் மனு வழங்கினா். இதில் நகரச் செயலா் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினா்கள் பரமராஜ், ரஞ்சனி கண்ணம்மா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதுபோல இலுப்பையூரணி ஊராட்சி தாமஸ் நகா், பூரணம்மாள் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கட்சியின் வட்டச் செயலா் பாபு தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாரிடம் மனு அளித்தனா்.