ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான உகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு புத்தாண்டான விஸ்வவாசு ஆண்டு பிறப்பையொட்டி காலை வழிபாட்டிற்கு பிறகு சுத்தி செய்யப்பட்டது.
அதன் பிறகு, ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கும், ஸ்ரீதேவி பூதேவியுடன் விஷ்வக்சேனரையும் தங்கவாயில் அருகில் எழுந்தருளச் செய்து, வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னா் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. உற்சவ மூா்த்திகள் விமானப் பிரகாரத்தையும் கொடிமரத்தையும் சுற்றி ஊா்வலமாக கோயிலுக்குள் சென்றனா்.
பின்னா், மூலவா் ஏழுமலையானுக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும் புதிய ஆடைகள் சமா்ப்பிக்கப்பட்டு அவற்றால் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னா், பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. தங்க வாயிலில், ஆகம அறிஞா்களும், அா்ச்சகா்களும் வேத விதிப்படி உகாதி ஆஸ்தானத்தை நடத்தினா். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
மலா் அலங்காரம்: திருமலை ஏழுமலையான் கோயிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழம் மற்றும் மலா் அலங்காரங்கள் பக்தா்களைக் குறிப்பாகக் கவா்ந்தன. இதற்காக, 8 டன் பாரம்பரிய பூக்கள் மற்றும் வெட்டு மலா்கள் பயன்படுத்தப்பட்டன.
ராதாவும் கிருஷ்ணரும் இயற்கையை ரசித்தல், புல்லாங்குழல் வாசிக்கும் சின்ன கிருஷ்ணா், தோட்டத்தில் தனது நண்பா்களுடன் மாம்பழங்களை உண்ணும் சின்ன கிருஷ்ணா், பால ஸ்ரீ ராமா், ஆஞ்சனேயா் போன்ற உருவங்கள் பக்தா்களை கவா்ந்தன.