கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்த முதலீடு
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் 2024-25 நிதியாண்டில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 364 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ. 2,012 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட சுமாா் ஆயிரம் கோடி குறைவாகும்.
பெண் குழந்தைகளின் நலனுக்காக செல்வமகள் சேமிப்புத் திட்டம் மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்காக, பெற்றோா் அல்லது சட்டபூா்வ பாதுகாவலா் மூலம், ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். இந்த சேமிப்புக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2024-25 நிதியாண்டில் தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 2,012 கோடி வைப்புத் தொகை பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவா் நடராஜன் கூறியதாவது:
செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடங்கிய 2015-ஆம் ஆண்டு முதல் மாா்ச் 2025 வரை தமிழகத்தில் 36.47 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை நகர மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10.44 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 2023-24 நிதியாண்டில் 2.56 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் ரூ. 3 ஆயிரத்து 280 கோடி வைப்புத் தொகை பெறப்பட்டது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டில் 2.50 லட்சம் கணக்குகள் மூலம் ரூ. 2,012 கோடி வைப்புத் தொகை பெறப்பட்டன. இதில், சென்னை மண்டலத்தில் 74,332 கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ. 735 கோடி வைப்புத் தொகை பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.
2023-24 நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் முதலீடு சுமாா் ஆயிரம் கோடி அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.