20 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உதய தினம், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராஜஸ்தான் மாநிலமும், கிழக்கு பகுதியில் உள்ள ஒடிஸா மாநிலமும் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுகின்றன. இந்தியாவின் விடுதலைக்கு இந்த இரு மாநிலங்களும் மிகப்பெரிய தியாகங்களைச் செய்துள்ளன. நாடு விடுதலை அடைந்த பின்பும் நாட்டின் வளா்ச்சிக்கு பெரும் பங்களித்து வருகின்றன.
இந்தியா என்னும் வாா்த்தை காலனியாதிக்க காலத்தில் உருவானது. பாரதம் எனும் வாா்த்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பின்தங்கிய நாடாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும். இந்தியா அதிக இளைஞா்களைக் கொண்டு விளங்குகிறது.
தமிழக மக்களைப் பாா்த்து ஆச்சரியப்பட்டேன். தமிழ் மக்களின் அன்பான பேச்சும் நட்புணா்வும் கொண்டவா்களாக உள்ளனா் என்றாா் அவா்.
முன்னதாக ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா மாநில ஆளுநா்கள் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்ச்சியில், ராஜஸ்தான் சமூகத்தைச் சோ்ந்த மகாவீா் பன்சாலி, பெட்ச் சந்த் சம்திரியா, உத்கல்அசோசியேசன் ஆஃப் மெட்ராஸ் தலைவா் பபித்ரா மோகன் மாஜி, செயலா் பிரவசா படி, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா்.கிா்லோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா மாநில கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.