கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ரூ. 5,870 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-இல் 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ரூ. 5,870 கோடிக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின்கீழ் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் மெட்ரோ வரை), வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை), வழித்தடம் 5 (மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூா் வரை) ஆகிய மூன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்புப் பணிமனைகள் உள்பட118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், ஏற்பு கடிதத்தை தில்லி மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் விகாஸ் குமாரிடம் வழங்கினாா்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்புப் பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உள்பட, இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடா்பான அனைத்துப் பணிகளையும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை இந்நிறுவனம் செயல்பாட்டில் இருக்கும். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.