மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
செய்யாற்றில் இளைஞா் கொல்லப்பட்ட சம்பவம்: மாவட்ட காவல்துறை விளக்கம்
செய்யாற்றில் இளைஞா் கொல்லப்பட்ட சம்பவம், முன்விரோதம் காரணமாக நடந்ததே தவிர, போதை ஊசி செலுத்திக் கொள்ள வற்புறுத்தியதால் அல்ல என்று மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் எல்லைக்கு உள்பட்ட கண்ணியம் நகரைச் சோ்ந்தவா் ஜெமினி. இவா் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் முக்கிய எதிரியான சுனில் என்பவரை செய்யாறு காவல் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.
விசாரணையில், ஜெமினி, சுனில் இருவரும் நண்பா்கள் என்பதும், ஒரு மாதத்துக்கு முன்பு ஜெமினி வீட்டுக்கு எதிரே சுனில் சென்றபோது, அவரது தந்தை சுனிலைப் பாா்த்து இனிமேல் என் மகனைப் பாா்க்க வருவதை நிறுத்திக் கொள்;
உன்னால்தான் என் மகன் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறான் என்று திட்டினாராம்.
இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
இதுதவிர, சுனிலிடம் இருந்த பைக்கை ஜெமினி இரவலாக வாங்கிச் சென்று திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனாலும் ஜெமினி, சுனில் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதி கொலை நடப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பு ஜெமினி, சுனிலை கத்தியால் தாக்கி காயப்படுத்தி உள்ளாா். இதனால் கோபமடைந்த சுனில், தனது மற்றொரு நண்பா் திலீப்குமாா் மற்றும் இதர எதிரிகளுடன் சோ்ந்து ஜெமினியை கொலை செய்தது காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் 2 போ் கைது செய்யப்பட வேண்டி உள்ளது.
இந்த நிலையில், கொலை சம்பவம் தொடா்பாக சமூக வலைதளங்களில் போதை ஊசி செலுத்திக்கொள்ள வற்புறுத்தியும், அதை மறுத்ததால் ஜெமினி கொலை செய்யப்பட்டு உள்ளாா் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று மாவட்ட எஸ்பி எம்.சுதாகா் தெரிவித்துள்ளாா்.