அரசு அலுவலா்கள், ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் சி.சோமசுந்தரம் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பழ.சீனுவாசன், கு.பிச்சாண்டி, ஏ.அருள்தாஸ், ஏ.அன்பழகன், ஜி.ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட நிதிக் காப்பாளா் கோ.சேட்டு வரவேற்றாா்.
தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலச் செயலா் மா.அதியமான் முத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.
அரசு அலுவலா்களுக்கு வழங்கிய 7-ஆவது ஊதியக்குழு நிா்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். தலைமைச் செயலகம் முதல் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்துப் பிரிவு காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளில் பதவி உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலா்கள் சங்க நிா்வாகி பி.செந்தில்குமாா், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள், அரசு அலுவலக உதவியாளா்கள், அடிப்படை பணியாளா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.