குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடிகை ஹன்சிகா மனு!
பாலிவுட் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவரை முஸ்கான் நான்சி என்பவர் திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து ஹன்சிகா, அவரது தாயார் ஜோதி, சகோதரர் பிரசாந்த் ஆகியோர் மீது முஸ்கான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கோரி நடிகை ஹன்சிகா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், `என்னுடைய சகோதரர் திருமணத்தின்போது ரூ.27 லட்சத்தை கடனாக கொடுத்தேன். அக்கடனை இருவரும் திரும்ப கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டதால் இது போன்று வழக்கு பதிவு செய்துள்ளார். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

அவர்கள் இருவருக்குமான திருமண பிரச்னையில் எங்களுக்கு நேரடியாக எந்த வித தொடர்பும் கிடையாது. பிரசாந்த்தின் சகோதரி என்ற ஒரே காரணத்திற்காக என்னை இவ்வழக்கில் சேர்த்துள்ளனர். தற்போது நடந்து வரும் திருமண பிரச்னையில் பணப் பிரச்னையை தீர்த்துக்கொள்ள இது போன்று திட்டமிட்டு என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு நீதிபதிகள் சராங்க் மற்றும் மோதக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை ஆய்வு செய்த நீதிபதிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் ஜூலை 3ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே இவ்வழக்கில் நடிகை ஹன்சிகா, அவரது தாயார், சகோதரர் ஆகியோர் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இப்போது அவ்வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹன்சிகா மனுத்தாக்கல் செய்துள்ளார். டிவி நடிகையான முஸ்கான் 2020ம் ஆண்டு பிரசாந்த்தை திருமணம் செய்தார். ஆனால் 2022ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா மீது முஸ்கான் வழக்கு தொடர்ந்துள்ளார்.