"நான் ஜிம் ஆரம்பிக்க காரணம் இதுதான்" - நடிகர் மணிகண்டன் பேட்டி
'மெட்ராஸ் ஃபிட்னெஸ்' ஜிம்மை தொடங்கி, தனக்கு ஃபிட்டான மற்றொரு புது ரூட்டை எடுத்துள்ளார், நடிகரும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனுமான மணிகண்டன்.
நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் ஃபிட்னெஸ்' சென்டர் திறப்பு விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வைபவ், பப்லு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதுபற்றி, மணிகண்டனிடம் பேசினேன்….
“நான், சீரியல் சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடி, கால் சென்டர்ல ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தேன். நாலஞ்சு வருடம் தொடர்ச்சியா நைட் ஷிஃப்ட்தான். லேட் நைட் சாப்பிடுறது, லேட்டா எழுந்திருக்கிறதுன்னு இருந்ததால ஓவரா வெயிட் போட்டுடுச்சு. அப்போ, என்னோட வெயிட் 100 கிலோ இருந்தது. அதனால, ஜிம்முக்கு போயிதான், வெயிட் லாஸ் பண்ணினேன். எனக்கு புது நம்பிக்கையே வந்துடுச்சு. அதுலருந்து, என் உடம்பை நேசிச்சு தொடர்ச்சியா ஜிம் போக ஆரம்பிச்சுட்டேன்.
என்ன சூழலா இருந்தாலும் ஃபிட்னெஸ்ல மட்டும் ரொம்ப கவனமா இருப்பேன். இப்போவரைக்கும் ஜிம் போயிட்டிருக்கேன். நான் வெயிட்டைக் குறைச்சப் பிறகுதான் சீரியல், சினிமான்னு நடிக்க வாய்ப்பும் வந்தது. ஜிம்முக்கு போறது வெறும் உடல் ஃபிட்னெஸ் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. அது, நம்ம மனசுக்கும் தன்னம்பிக்கையையும் தெம்பையும் கொடுக்கும். உடம்புக்கு ஆக்டிவிட்டி கொடுக்கும்போது, செம்ம எனர்ஜியா இருப்போம்.
அதேமாதிரி, ஜிம் போய்தான் குறைக்கணும்னு அவசியம் கிடையாது. நிறைய வழிகளில் எடைக்குறைப்பு பண்ணலாம். அதுல ஒண்ணுதான் ஜிம். ஃபிட்னெஸ் மட்டுமில்லாம புது மனிதர்கள், புது சூழலை நமக்கு அறிமுகப்படுத்தும். நம்மை சுத்தி புது சர்க்கிள் உருவாவாங்க. ஜிம் பற்றின நாலேஜை ஷேர் பண்ணிக்குவாங்க. கஷ்டமான வொர்க் அவுட்டைக்கூட ஜாலியா டைம்பாஸா ரிலாக்ஸா பண்ணலாம்.
இன்னும் சொல்லப்போனா, நிறைய பேர் ஜிம் வந்து காதலிச்சு திருமணம்லாம் பண்ணிருக்காங்க. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான உலகம். ஜிம் போனப்போ எனக்கும் நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. அப்படி, ஜிம் நாலேஜோட இருக்கிற நண்பர்களோடத்தான் ஆழ்வார்பேட்டையில் நல்ல இடமா பார்த்து ஜிம் ஆரம்பிச்சிருக்கோம். வெறும் ஜிம் அப்படிங்கிறது மட்டுமில்லாம லைஃப் ஸ்டைல் ஃபிட்னெஸா மாத்தணும்ங்கிறதுதான் எங்களோட ஐடியா" என்பவர் 'மெட்ராஸ் ஃபிட்னெஸ்' சென்டரில் இருக்கும் வசதிகளையும் பகிர்ந்துகொண்டார்.
"பல ஜிம்களில் அறைகள் சின்ன சின்னதா இருக்கும். ஆனா, இங்க அறைகள் ரொம்ப பெருசா, தாராளமா இருக்குன்னு ஜிம்முக்கு வர்றவங்க வியந்துபோறாங்க. 7000 சதுர அடி அளவுக்கு வெச்சிருக்கோம். கார்டியோவுக்கு மட்டுமே தனி ஃப்ளோர். ஜூம்பா டான்ஸுக்கு தனி ஃப்ளோர். வொர்க் அவுட் எக்யூப்மெண்ட்டுக்கெல்லாம் தனித்தனி ஃப்ளோர். மற்ற ஜிம்களுக்கு போனா, பெரும்பாலும் ஒருத்தர் ஒர்க் அவுட் பண்ணி முடிக்கிற வரைக்கும் இன்னொருத்தர் காத்திருக்கணும். ஆனா, நாங்க எக்ஸ்ட்ரா எக்யூப்மெண்ட்ஸ் வெச்சிருக்கிறதால வெயிட் பண்ணவே தேவையில்ல. எங்கக்கிட்ட சான்றிதழ் பெற்ற 10 ட்ரெயினர்ஸ் இருக்காங்க.
ஸ்ட்ரீம் பாத்லேர்ந்து எல்லாமே ஹைடெக்கா இருக்கும். பெண்களுக்காக, வுமன் ட்ரெயினர்ஸையும் நியமிக்கிறதா ஒரு ப்ளான் இருக்கு. எல்லாமே ஹைடெக்கா வெச்சிருக்கிறதால வருடத்துக்கு 17,000 ரூபாய் ஃபீஸ் நிர்ணயம் பண்ணியிருக்கோம்” என்றவரிடம் திறப்பு விழாவுக்கு நடிகர் “விஜய் சேதுபதி, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் வைபவ் எல்லாம் வந்தாங்களே... என்ன சொன்னாங்க?” என்றோம்… “விஜய் சேதுபதி சார் ரொம்ப நல்ல மனிதர். எந்த நல்ல விஷயம் பண்ணினாலும் ஊக்குவிப்பார். ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னதுமே வந்து திறந்து வெச்சார். வந்து சுற்றிப்பார்த்துட்டு, `ரொம்ப ஹைடெக்கா இருக்கு. எனக்கும் டைம் கிடைக்கும்போது நிச்சயமா இந்த ஜிம்முக்கு வர்றேன்'னு சொன்னார். அவருக்கு இந்த நேரத்துல மிகப்பெரிய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.
அதேமாதிரி, இந்த ஜிம் ஆரம்பிக்க ரொம்ப என்கரேஜ் பண்ணினது என் தங்கை ஐஸ்வர்யாதான். 'உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. ஜிம் ரொம்ப சூப்பரா இருக்கு. நானும் இந்த ஜிம்மில வந்து சேர்ந்துடுறேன்' அப்படின்னு எக்ஸைட்மெண்டா சொன்னாங்க. ஏன்னா, எவ்ளோ பிஸியா ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தாலும் ஜிம்முக்குப் போய்டுவாங்க. உடம்புமேல ரொம்ப கேரிங்" என்றவரிடம், புதிதாக ஜிம்மில் சேர்ந்த செலிப்ரிட்டிகள் யார் யார்?" என்று கேட்டேன்.
“நிறைய நடிகர்கள் இந்த ஜிம்மைப் பார்த்துட்டு வர்றதா சொல்லியிருக்காங்க. இப்போதைக்கு, நடிகர் ஷாம் சார் வந்து ஜாய்ன் பண்ணியிருக்கார். வைபவ்வும் வரேன்னு சொல்லிருக்கார். இன்னும் நிறைய பேர் சேர்றதா சொல்லிருக்காங்க. அவர்களைத்தாண்டி, தொழிலதிபர்கள், ஐ.டி. ஒர்க்கர்ஸ், ஸ்டூடன்ஸுன்னு வர ஆரம்பிச்சுட்டாங்க" என்கிறார்.