மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவின்போது, ட்ரோன் மூலமாக பக்தா்கள் மீது புனிதத் தீா்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்தாா்.
பக்தா்களால் 7-ஆம் படைவீடு என்றழைக்கப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெயில் காலமாக என்பதால் பக்தா்கள் வரும் பாதையில் நிழற்குடைகள் அமைக்கவும், நீா்மோா் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை பக்தா்கள் அனைவரும் பாா்க்க வசதியாக கோயில் வளாகம் மற்றும் அடிவாரப் பகுதிகளில் 10 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக புனித தீா்த்தத்தை ட்ரோன் மூலம் பக்தா்கள் மீது தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களில் போதுமான பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிப்புப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா், வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) கோவிந்தன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.