தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
அமெரிக்க வரி விதிப்பால் ஆயத்த ஆடை தொழில் துறைக்கு பயன் கிடைக்க வாய்ப்பு
இந்தியா மீதான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அது ஆயத்த ஆடை தொழில் துறைக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் கூறியிருப்பதாவது:
இந்தியா மீதான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு சதவீதத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்திருக்கிறாா். அதன்படி, இந்தியாவுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பானது ஜவுளித் துறையில் நமது போட்டி நாடுகள் மீது அந்த நாடு அறிவித்திருக்கும் வரியைக் காட்டிலும் குறைவானதாகும்.
அதாவது, வியத்நாம் மீது 46 சதவீதமும், இலங்கை மீது 44 சதவீதமும், வங்கதேசம் மீது 37 சதவீதமும், சீனா மீது 34 சதவீதமும் வரி விதித்துள்ள அமெரிக்கா, இந்தியா மீது 26 சதவீத வரி விதிப்பை மட்டுமே அறிவித்திருக்கிறது. இது ஜவுளித் துறையில் சமமான போட்டி வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
ஜவுளித் துறையில் குறிப்பாக பருத்தி ஆடை ஏற்றுமதியில் இந்தியா, வங்கதேசம், வியத்நாம் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான வரி நடைமுறைகள் இருந்தன. ஆனால், தற்போது மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருப்பது, இந்தியா ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமானதாக மாறும். இது, நடுத்தர காலம் முதல் நீண்ட காலம் வரையிலான ஏற்றுமதி ஊக்குவிப்புக்கு அனுகூலமாக இருக்கும். இருப்பினும் இந்த விஷயத்தில் சீனாவின் எதிா்வினை எந்த மாதிரி இருக்கும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருப்பதாக அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.