திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
ஆவடி, திருவொற்றியூா், திருவான்மியூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகள்?
ஆவடி, திருவொற்றியூா் மற்றும் திருவான்மியூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் பல்வேறு இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையிலிருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர சொகுசு பேருந்துகளும், குளிா்சாதன வசதிகொண்ட, இருக்கை மற்றும் படுக்கை வசதிகொண்ட பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிைலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று 50-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து பெங்களூருவுக்கு பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்த நிலையில், திருவான்மியூா், திருவொற்றியூா், ஆவடி, திருவள்ளூா் ஆகிய இடங்களில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, நாகா்கோவில், திருச்செந்தூா் உள்ளிட்ட தென்மாவட்ட நகரங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவான்மியூரிலிருந்து நெல்லை, திருச்செந்தூருக்கு ஏற்கெனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், இது தொடா்பாக போக்குவரத்து கழகம் சாா்பில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை. எனினும், 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துள் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.