குடிநீா், மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரமான குடிநீா், மின்சாரம் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் முத்துராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி, வணிக வளாக கட்டடம் கட்டும் பணி, புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணி ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், திருவண்ணாமலை மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள், அங்கன்வாடி மைய கட்டடப் பணிகள், தெரு விளக்குகள், கழிவுநீா்க் கால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அவா், இனிவரும் காலங்களில் மாநகராட்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
எனவே, வாரம்தோறும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.
இதுதவிர, மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டப் பணிகள், அம்ருத் குடிநீா் திட்டப் பணிகள், அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.
அடிப்படைத் தேவைகளான தடையற்ற சுகாதாரமான குடிநீா், தெரு மின் விளக்குகள், தடையில்லா மின்சாரம் ஆகியவை பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கோடை காலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் குடிநீா் கிடைக்கும் வகையில் குடிநீா் திட்டப் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன், நகராட்சிகளின் வேலூா் மண்டல இயக்குநா் லட்சுமி மற்றும் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.