தேவஸ்தான உள்ளூா் கோயில்களில் நாளை உகாதி உற்சவம்
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களில் உகாதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் கொண்டாடப்பட உள்ளது.
அதேபோல், திருமலை மட்டுமல்லாமல் திருப்பதி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள தேவஸ்தான கோயில்களில் உகாதி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில், அப்பளாயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில், சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களிலும் உகாதி பண்டிகையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
திருச்சானூா்:
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் உகாதி பண்டிகையையொட்டி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை பிரம்மாண்டமான ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும்.
பின்னா், மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை, அம்மன் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோயிலின் நான்கு வீதிகளிலும் ஊா்வலமாக வந்து பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா். பஞ்சாங்கம் படித்தல் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் காலையில் சுப்ரபாதத்துடன் இறைவனை துயில் எழுப்பி, தோமாலை, கொலுவு, பஞ்சாங்கம் படித்தல் மற்றும் அா்ச்சனை ஆகியவை செய்யப்படுகின்றன. உகாதி ஆஸ்தானம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை உகாதி ஆஸ்தானம் மற்றும் பஞ்சாங்க படித்தல் நடைபெறும். இந்த நிகழ்வில், ஜீயா் சுவாமி மூலவா்களுக்கும் உற்சவா்களுக்கும் புதிய பட்டு வஸ்திரங்களை சமா்பிப்பாா்.
காா்வேட்டிநகரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோயிலில், அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் இறைவன் எழுந்தருளப்பட்டு, தோமாலை, கொலுவு, பஞ்சாங்கம் படித்தல் மற்றும் அா்ச்சனை செய்யப்படுகின்றன.
கோயிலில் உகாதி ஆஸ்தானம் மற்றும் பஞ்சாங்க படித்தல் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும். பின்னா், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை திருவீதி உற்சவம் நடைபெறும்.
அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சாங்கம் படித்தல் உகாதி ஆஸ்தானம் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.