1.78 கோடி பின் தொடர்பவர்கள்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!
இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை, பெங்களூரு உள்பட 10 அணிகள் விளையாடும் 18-வது ஐபிஎல் தொடர் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி கோலாகமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு வெளியேயும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை போட்டியின் போது சென்னை அணி ரசிகரை ஒரு கும்பல் தாக்கிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் போட்டியின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட கிரிக்கெட் கிளப் பெருமையை ஆர்சிபி அணி பெற்றுள்ளது. 1.77 கோடி பேருடன் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸைப் பின்னுக்குத் தள்ளி தற்போது 17.8 கோடி பின் தொடர்பவர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 1.62 கோடி பேருடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபிக்கு முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் என மொத்தமாக 4 கோடி பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் பெளலா்களின் புலம்பல்கள்!
18 தொடர்களாக ஐபிஎல் கோப்பையை தொட்டுக்கூட பார்க்காத ஆர்சிபி அணி இந்தத் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் கொல்கத்தாவையும், 2-வது போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.
விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் உள்ளிட்ட உயர்தர வீரர்கள் ஆர்சிபி அணியில் விளையாடியிருந்தாலும், அந்த அணி ஒரு கோப்பையை வெல்லுவதற்கு கடுமையாக போராடி வருகிறது. இருப்பினும், 2009. 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
எதுவாயினும், அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் கிரிக்கெட் அணிக்கு ஐபிஎல்லில் கோப்பை தரமாட்டர்கள் என்று சென்னை, மும்பை அணி ரசிகர்கள் பெங்களூரு ரசிகர் மீது மீண்டும் விமர்சனத்தை எழுப்பியுள்ளதால் சமூகவலைதளங்கள் களேபரமாகியுள்ளன.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!