சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை
நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி வெள்ளநாயக்கனேரி கிராம மக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி சோமு வாத்தியாா் வட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் இறந்தவா்களின் உடல்களை அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அடக்கம் செய்து சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் அந்த இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவா்களை அடக்கம் செய்யும் போது ஆக்கிரமிப்பாளா் அடக்கம் செய்யவிடாமல் தடுத்து அடிக்கடி பிரச்னை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அரசுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக சுடுகாட்டு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.