திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
ஏப்.21-க்குள் பொது இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா்
வேலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் கொடிக் கம்பங்களை ஏப்.21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலா் சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள், இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது -
பொது இடங்களில் உள்ள அனைத்து அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் அடித்தள பீடத்துடன் 1,348 கொடிக் கம்பங்களும், 699 கொடிக் கம்பங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் ஏப். 21-ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் சாா்பில் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் தாமாக அகற்ற வேண்டும்.
அவ்வாறு அகற்றாத கொடிக் கம்பங்கள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவினம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்புகளிடம் இருந்து வசூலிக்கப்படும். இனிவரும் காலங்களில் உயா்நீதிமன்ற உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிரந்தர கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி இல்லை.
அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் தங்கள் சொந்த நிலத்தில் நிரந்தர கொடி கம்பங்களை நிறுவுவதற்கு முறையான அனுமதியை பெற்ற பிறகே அமைக்க அனுமதிக்கப்படும். அனைத்து வட்டாட்சியா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் கொடி கம்பங்கள் அகற்றப்படும் விவரங்களை நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும்.
கொடிக் கம்பம் அகற்றப்பட்ட பிறகு அந்த இடத்தின் உரிமையுள்ள துறையினா் முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் எஸ்.பி. என்.மதிவாணன், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் அ.செந்தில்குமாா் (வேலூா்), சுபலட்சுமி (குடியாத்தம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.