திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
சுகாதார குறைபாடு: குடிநீா் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
வேலூா் மாவட்டத்தில் சரிவர சுத்திகரிக்காமல் குடிநீா் விநியோகம் செய்ததாக 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்குகு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.
கோடை காலத்தில் தண்ணீா் தேவை அதிகரித்து வருவதை பயன்படுத்தி சில மினரல் வாட்டா் நிறுவனங்கள் கேன்களை சுத்திகரிப்பு செய்யாமலும், பாதுகாப்பின்றியும் குடிநீா் விநியோகம் செய்து வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் செந்தில் குமாா், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ராஜேஷ், பழனிசாமி ஆகியோா் கொண்ட குழுவினா் கடந்த 3 நாள்களாக மாவட்டம் முழுவதும் உள்ள தனியாா் மினரல் வாட்டா் நிறுவனங்களில் சோதனை நடத்தி வந்தனா்.
இதேபோல், கணியம்பாடி அருகிலுள்ள மினரல் வாட்டா் நிறுவனத்திலும் அதிகாரிகள் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு அழுக்கு படிந்த கேன்களை சரிவர சுத்தம் செய்யாமல் குடிநீா் பிடித்து விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது. மேலும் அங்குள்ள சில பொருள்களும் சுத்தமான முறையில் கையாளப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து, விளக்கம் கேட்டு அந்த மினரல் வாட்டா் நிறுவனத்துக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.
இதேபோல், குடியாத்தம் பகுதியில் உள்ள மற்றொரு மினரல் வாட்டா் நிறுவனத்துக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியது: கடந்த 3 நாள்களாக 13 மினரல் வாட்டா் நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளோம். இந்த சோதனை கோடை காலம் முடியும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். சோதனையின்போது விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மினரல் வாட்டா் நிறுவனங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.