திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கல்
15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத் எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்வியில், நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், சிறந்த பஞ்சாயத்து ராஜ் அமைப்பை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மக்களவையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் பேராசிரியா் எஸ்.பி. சிங் பகெல் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
பஞ்சாயத்து என்பது ஒரு மாநில விஷயம். மேலும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் , தமிழ்நாடு உட்பட நாட்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் திறம்பட செயல்பாட்டிற்கான திட்டங்களின் கீழ் நிதியுதவி உள்பட மாநில அரசுகளின் முயற்சிகளை நிறைவேற்ற ஆதரித்து வருகிறது.
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய கிராம ஸ்வராஜ் திட்டம் (ஆா்ஜிஎஸ்ஏ), 15-ஆவது நிதி ஆணையம், பஞ்சாயத்துகள் ஊக்குவிப்புத் திட்டம் (ஐஓபி) மூலம் தமிழகத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022-23-ஆம் ஆண்டில் 15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.2761 கோடியும், ஆா்ஜிஎஸ்ஏ-இன்கீழ் ரூ.25.42 கோடியும், ஐஓபி-இன்கீழ் ரூ.1.80 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2023-24-ஆம் ஆண்டில் 15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் ரூ.2791 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.