திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி - ரயில்வே அமைச்சா்
தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தா்மபுரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ. மணி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்வியில், ‘தமிழ்நாட்டில் தற்போது பயணிகளுக்கு இலவச வைஃபை சேவைகளை வழங்கும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் இந்த வசதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களின் விவரங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மக்களவையில் ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்துள்ள பதில்:
தற்போது டிஜிட்டல் டிக்கெட் சேவைகள் பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு ஐஆா்சிடிசி ரயில் கனெக்ட் செயலி மூலமாகவும், முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளுக்கு யுடிஎஸ் எனும் கைப்பேசி செயலி மூலமாகவும் கிடைக்கின்றன. தற்போது ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் சதவீதம் தோராயமாக 86 சதவீதமாக உள்ளது. மேலும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில்
கிட்டத்தட்ட 8 சதவீதம் இந்திய ரயில்வேயில் யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.
இந்திய ரயில்வே இதுவரை தமிழ்நாட்டில் 415 ரயில் நிலையங்கள் உள்பட கிட்டத்தட்ட 6,115 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவைகளை வழங்கியுள்ளது.
கூடுதலாக, கிட்டத்தட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தொலைத்தொடா்பு சேவை வழங்குநா்களால் 4ஜி மற்றும் 5 ஜி கவரேஜ் உள்ளது. இந்த நெட்வொா்க்குகள் பயணிகள் தரவு இணைப்புக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைக்கிறது என்றாா் அமைச்சா்.