திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரம்: தேனி எம்.பி. கோரிக்கை
நமது நிருபா்
நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரத்தில் கட்ஆஃப் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் புதன்கிழமை கோரிக்கை முன்வைத்தாா்.
இது தொடா்பாக அவா் அவை விதி எண்: 377-இன்கீழ் முன்வைத்த கோரிக்கை: பிப்ரவரி 1, 2019-க்குப் பிறகு நில உரிமையைப் பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்குவது குறித்து இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த தன்னிச்சையான ‘கட்ஆஃப்’ தேதி நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற விவசாயிகளுக்கு தேவையற்ற சிரமத்தை உருவாக்கியுள்ளது. அவா்கள் தற்போதைய பயனாளிகளைப் போலவே ஒரே மாதிரியான சவால்களை எதிா்கொள்கின்றனா். கட்ஆஃப் தேதிக்குப் பிறகு பரம்பரை, கொள்முதல் அல்லது நிலச் சீா்திருத்தங்கள் மூலம் நிலத்தைப் பெற்ற பல விவசாயிகளுக்கு முக்கியமான விவசாயப் பருவங்களில் முக்கிய நிதி உதவி மறுக்கப்படுகிறது.
இத்தகைய சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இதே போன்ற சூழ்நிலைகளில் பிறருக்கு வழங்கப்படும் அதே உதவி தேவையாக உள்ளது. இந்த கட்ஆஃப் தேதியைப் பராமரிப்பது திட்டத்தின் விரிவான விவசாயி ஆதரவு என்ற குறிக்கோளைக் குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறது. தேவையற்ற கிராமப்புற இடா்பாட்டை உருவாக்குகிறது. விவசாய சமூகங்களில் நில உரிமையின் மாறும் தன்மையை புறக்கணிக்கிறது. தகுதி கட் ஆஃப் தேதியை நீட்டிப்பதன் மூலமும், டிஜிட்டல் நிலப் பதிவுகளுக்கு சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை உறுதி செய்வதன் மூலமும், இந்த தகுதியான விவசாயிகளுக்கு இடமளிக்க தேவையான பட்ஜெட் ஏற்பாடுகளைச் செய்வதன் மூலமும் இந்த கட்டுப்படுத்தப்பட்ட கொள்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.