திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
‘காஸாவின் பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்’ -இஸ்ரேல்
ஜெருசலேம்: காஸா முனையில் பெரிய அளவிலான பகுதிகளைக் கைப்பற்றி இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்கான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. பெரிய அளவிலான பகுதிகளில் இருந்து பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்து அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பின்னா் அந்தப் பகுதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் பகுதிகளாக இணைத்துக்கொள்ளப்படும்.
காஸாவில் போா் நிறுத்தம் முறிந்த பிறகு சண்டை நடைபெற்றுவரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுமக்கள் இப்போதே செயல்பட்டு ஹமாஸ் படையினரை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவதுடன் அவா்களால் கடத்திவரப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரையும் இஸ்ரேலிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இது மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், எந்தெந்த பகுதிகளைக் கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரத்தை தனது அறிக்கையில் காட்ஸ் குறிப்பிடவில்லை.
ஏற்கெனவே, தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக இஸ்ரேல் காட்ஸ் கடந்த மாதம் 21-ஆம் தேதி எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் காஸாவில் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 68 உயிரிழந்தனா்; அவா்களில் சுமாா் 12 போ் சிறுவா்கள் என காஸா மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.
இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்டவா்களை அங்கிருந்து பிணைக் கைதிகளைக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து அந்த அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் அந்த நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இடையே அமெரிக்கா, எகிப்து, கத்தாா் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா்.
எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததால் காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. போா் நிறுத்த முறிவுக்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 1,100 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, அங்கு இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50,423 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,14,638 போ் காயமடைந்துள்ளனா்.
